நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கின்ற நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் அளிக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
Citizens’ Voice திட்டத்தின் கீழ், இந்தத் தொழில்முனைவோரின் பிரதிநிதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 50%க்கும் அதிக பங்களிப்பு அளிக்கும் இந்தத் தொழில்முனைவோர், இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரிவை தேர்தல் காலங்களில் மட்டுமே அன்புடன் அணுகி, பின்னர் கவனிக்காத நிலை இருப்பது முற்றிலும் ஏற்க முடியாதது.
கடந்த காலங்களில் பராட்டே சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டபோதிலும், தொழில்முனைவோர்களின் கடன் மறுசீரமைப்புகள் நடைபெறாததே தவறான முன்னுதாரணமாக அமைந்துள்ளது எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 மற்றும் நாட்டின் வங்குரோத்து நிலை போன்ற சம்பவங்களில் இந்தத் துறை பெரும் பாதிப்பை சந்தித்தது.
அரசாங்கம் இப்போது இந்தத் தொழில்முனைவோர்களுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும். தேர்தல்களின்போது அவர்கள் மீது காட்டிய அன்பையும் உறுதியையும் தற்போது காட்டவேண்டும். நிலையான தீர்வுகளை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், வங்கிக் கட்டமைப்பில் இந்தத் தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் சிக்கல்கள், கடன்கள் தொடர்பான வட்டி சலுகைகள், தள்ளுபடிகள் உள்ளிட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் எழுப்புவதாகவும், தொழில்முனைவோர் எதிர்கொள்ளும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
“2028ஆம் ஆண்டில் வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை சந்திக்க நேரிடும். எனவே, பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேணவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. அந்த வளர்ச்சியில் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.
நாட்டின் உண்மையான பொருளாதார நலன்களை நோக்கி அரசாங்கம் நகரவேண்டிய அவசியத்தை அவர் வெளிப்படுத்தினார்.


















