-தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானம்-
தமிழர்களுக்கான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத் தேர்தலை விரைந்து நடாத்துதல் என்பவற்றுக்கு இந்தியா ஊடாக அழுத்தம் பிரயோகிப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
தமிழரசுக் கட்சியின் 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது அரசியல் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசியல் குழு உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம், எஸ்.குகதாசன், இரா.சாணக்கியன், துரைராஜசிங்கம் மற்றும் கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின்போது அண்மையில் வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்தோடு தமிழர்களுக்கான ஏற்றுக் கொள்ளத்தக்க நியாயபூர்வமான தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் மற்றும் இவ்வருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துதல் என்பன தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் எனவும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் இணைந்து அவ்விடயங்கள் சார்ந்து இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தல்களை முன்வைப்பது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதேபோன்று பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலீடாக தற்போது அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு குறித்தும் இங்கு விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.
பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்கும் அதேவேளை, அச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்குப் பிறிதொரு சட்டம் அவசியமில்லை என்பதே கட்சியின் நிலைப்பாடு எனவும், இருப்பினும் இப்புதிய வரைவின் உள்ளடக்கங்கள் மற்றும் பாதகத் தன்மைகள் குறித்து ஆராய்வதற்கு கட்சி மட்டத்திலான கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்வதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அக்கலந்துரையாடலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்கும் அரசியல் குழு உறுப்பினர்கள் உடன்பட்டனர். மேலும் அண்மையில் மட்டக்களப்பில் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் முன்னிலைப்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறிநேசனால் அளிக்கப்பட்ட விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என அவருக்கு அறியத்தருவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















