இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பிள்ளைகளுக்கு சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும் நாடுகளாகக் கருதப்படலாம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சீன அரசாங்கத்தினால் பாடசாலை சீருடைக்காக இலவசமாகத் துணிகளை வழங்கும் திட்டத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டின் கல்வித் தரத்தைப் பேணுவதற்கு சீன அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பு ஒரு பாரிய பலமாகும் எனவும், இதன் மூலம் நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் சமத்துவத்துடன் கல்வியைத் தொடர வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
அத்துடன், தொடர்ச்சியாகப் பல வருடங்களாக பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்குவதாக சீனா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையைத் தெளிவாக வெளிப்படுத்தும் ஒரு விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை எதிர்நோக்கும் ஒவ்வொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தைரியம் அளிப்பதாகத் தெரிவித்த பிரதமர், முழு இலங்கை மக்களின் சார்பாக இந்த பாடசாலை சீருடைத் துணித் தொகுதியை அன்பளிப்பு செய்தமைக்காக சீன அரசாங்கத்திற்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
கல்வி சார்ந்த இந்த ஒத்துழைப்பானது, வரும் காலங்களிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


















