தற்போதைய அரசாங்கம் முறையான ஆய்வுகள் அல்லது நிபுணர் கலந்துரையாடல்கள் இன்றி முன்னெடுக்கும் கல்விச் சீர்திருத்தங்கள், நாட்டின் வலுவான கல்வி முறையைச் சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, தெகிவளை – கல்கிசை மாநகர சபை உறுப்பினர் டாக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்தார். நேற்றுமுன்தினம் எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர்,
கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் அவசியம் என்பதை தமது கட்சி ஏற்றுக்கொண்டாலும், தற்போதைய அரசாங்கம் எவ்வித முன்னோடித் திட்டங்களும் இன்றி, கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகித்துள்ளது.
நிபுணர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருடனோ ஆலோசிக்காமல் அவசர அவசரமாக இவை முன்னெடுக்கப்படுகின்றன.
76 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த இலவசக் கல்வியின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்படுகின்றது. பாடசாலைக் கல்வியை உள்நாட்டிலேயே பலவீனப்படுத்தி, தனியார் கல்வியை ஊக்குவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டார்.


















