-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சாடல்-
நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் ஒரு பச்சைத் துரோகி. மாவை அண்ணரால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர். ஆனால் அவருக்கும் தமிழரசுக் கட்சிக்கும் துரோகம் செய்துவிட்டார் என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் சாடியுள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என இரா.சம்பந்தனால் சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகிய இருவருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மத்திய குழுவில் அந்த தகவல் பரிமாறப்பட்டு குறித்த இருவரும் நேரடியாக சம்பந்தன் ஐயாவிடம் சென்று கதைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் சென்று கதைத்தார்கள். இருவரும் என்னிடமும் கதைத்தார்கள். நானும் தேர்தல் வேண்டாம். நீங்கள இருவரில் ஒருவர் இரண்டு வருடம் அல்லது ஒரு வருடம் பொறுப்பு எடுங்கள். அடுத்த வருடத்தை மற்றவருக்கு கொடுங்கள் எனக் கூறினேன். அதை வேணும் என்றால் குலுக்கல் அடிப்படையில் தீர்மானித்துக் கொள்ளுங்கள் எனக் கூறினேன்.
சம்பந்தன் ஐயா தம்மை தலைவராக பிரகடனப்படுத்த வேண்டும் என அவர்கள் விரும்பினார்கள். ஆனால் அவ்வாறு பிரகடனப்படுத்த சம்பந்தன் விரும்பவில்லை. அதற்காக வயது முதிர்ந்த நேரத்தில் கூட அரசாங்க வீட்டில் இருந்தது தவறு எனச் சொல்லி அந்த வீட்டை அரசாங்கத்திடம் கொடுத்து விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வேலை செய்தார்கள். எனவே, தங்களது சுயநலங்கள் பலிக்கவில்லை எனில் தலைவர்களையே கவிழ்ப்பவர்கள் இவர்கள்.
மாவை சேனாதிராஜா ஐயாவால் பதில் செயலாளராக கொண்டு வரப்பட்டவர் தான் சத்தியலிங்கம். பதில் செயலாளர் முடிவெடுத்து கடிதம் எழுதுவதாக இருந்தால் தலைவரது ஆலோசனை பெறப்பட வேண்டும். கடிதம் எழுத முன்பு தலைவருடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். ஆனால் சத்தியலிங்கம் அப்படி செய்யவில்லை. பச்சைத் துரோகி. அவரால் கொண்டு வரப்பட்டவர் அவருக்கு மட்டுமல்ல அந்தக் கட்சிக்கே துரோகம் செய்துள்ளார். அவரை செயலாளராக கொண்டு வந்ததால் தான் கட்சி கேவலமான நிலைக்கு சென்றது என அவர் மேலும் தெரிவித்தார்.


















