அநுர மீற்றர் தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய தரவுகளின்படி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கிய முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 2025 நவம்பர் மாதத்திற்குள் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளதுடன் 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை என குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடானது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட 30 முக்கிய வாக்குறுதிகளைக் கண்காணித்ததன் அடிப்படையில், 2026 வரவுசெலவுத் திட்டத்தையும் உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.
அநுர மீற்றரினால் கண்காணிக்கப்படும் வாக்குறுதிகள் பொதுமக்களின் அதிக ஆர்வம் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவை பொருளாதார சீர்திருத்தம், ஆளுமை, ஊழல் எதிர்ப்பு, சட்டமும் ஒழுங்கும் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கிய கொள்கைப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















