இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இ.தொ.காவை சேர்ந்த 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா பயணமானார்கள்.
இந்திய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இம்மாதம் இன்று 19ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை 11 நாட்கள் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வலுவூட்டும் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இக்குழு இந்தியா செல்கிறது.
இச்செயலமர்வில் இலங்கையிலிருந்து நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இ.தொ.காவைச் சேர்ந்த மொத்தம் 20 உள்ளூராட்சி மன்ற உப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த செயலமர்வு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் பரிந்துரையின் கீழ், இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் முதலாவது வேலைத்திட்டமாக அமைகிறது. உள்ளூராட்சி நிர்வாக திறன்களை மேம்படுத்துதல், மக்கள் சேவை செயல்திறன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடைமுறை முன்னேற்றம் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இச்செயலமர்வு நடத்தப்படவுள்ளது.


















