உடற்பயிற்சி செய்வதில் காட்டும் கவனத்தை ஜனாதிபதி மலையக மக்கள் விடயத்தில் காண்பிக்கவேண்டும் என முன்னிலை சோசலிஷ கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ கூறியுள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையகத்தில் அரசியல் தலைவர்கள் காலத்துக்குக் காலம் அரசாங்கங்களுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்களே தவிர, தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. அவர்கள் தோட்டக் கம்பனிகளுடன் இணைந்து ஒப்பந்த அரசியலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் தற் போதும் லயன் அறைகளில் வாழும் அந்த மக்களுக்கு முறையான முகவரிகளோ, வீதிகளோ அல்லது பிரதேச செயலக அங்கீகாரமோ இல்லை. மலையகப் பாடசாலைகளில் விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை.
இது அந்த மக்களின் எதிர்கால சந்ததியினரைத் திட்டமிட்டுப் பின் தள்ளும் செயலாகும். அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின்றி மலையக மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 10பேர்ச் காணி வழங்குவதாகக் கூறப்படும் வாக்குறுதிகள் வெறும் ஏமாற்று வேலையாகும். 1972ஆம் ஆண்டு காணிச் சீர்திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20 பேர்ச் காணி உரிமையை சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவிக்காகக் காத்திருக்காமல், இலங்கை அரசாங்கம் தனது சொந்தப் பொறுப்பில் உரிமையை வழங்க வேண்டும். மலையகத் தமிழ் மக்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டியது அவசியமாகும்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அம்பிகா சாமுவேல் போன்றவர்களைக் காட்டிப் பல வாக்குறுதிகளை வழங்கியது.
ஆனால், இப்போது அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்தப் பிரச்சினைகள் எதனையும் அவர்கள் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. மலையக மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க பல்வேறு சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து, இந்த ஆண்டில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்றார்.


















