புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதமர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் தயார், ஆனால் பிரேரணை இன்றும் வரவில்லை எனவும் கூறினார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், குழப்பங் களுக்கு மத்தியில் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல முடியாது.
இது குறித்து அனைத்துத் தரப்பினரையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 6ம் தரத்திற்கான பாடப் புத்தக சர்ச்சை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் உட்பட மூவர் கட்டாய விடுப்பில் அனுப்பபட்டுள்ளனர்.
கல்விச் சீர்திருத்தங்கள் நிறுத்தப்படவில்லை. அது தொடர்பான ஏனைய அனைத்துப் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. முதலாம் தரத்திற்குரிய கல்விச் சீர்திருத்தங்கள் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சித் தரப்பினர் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். ஒரு தலைமுறையையே கல்வியின் ஊடாக மாற்றி நாட்டின் தேசிய அபிவிருத்திக்குப் பங்களிக்கச் செய்யும் இவ்வாறான பாரிய சீர்திருத்தத்தை ஒரு சிறு குழுவினரின் சந்தேகங்களுக்கு மத்தியில் முன்னெடுக்க முடியாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.
எனவே, இதுகுறித்து மக்களைத் தெளிவுபடுத்தவும் உரிய தரப்பினருடன் முறையான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குத் திகதிகளையும் நாம் ஒதுக்கியுள்ளோம். அதற்கு முகங்கொடுக்க நாம் தயார். ஆனால் இன்றுவரை அந்தப் பிரேரணை கையளிக்கப்படவில்லை. ஒருவேளை அவர்கள் அதனைச் சமர்ப்பிக்காவிடின் அரசாங்கத்தின் சார்பில் நாமே இந்த வியாழக்கிழமை கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தைக் கொ ண்டுவந்து அனைத்துச் சந்தேகங்களையும் தீர்க்கத் தீர்மானித்துள்ளோம் என்றார்.


















