டித்வா பேரிடரினால் இலங்கை மின்சாரசபையின் உட்கட்டமைப்பு சந்தித்துள்ள 20 பில்லியல் ரூபாய் நஷ்டத்தை நுகர்வோரிடமிருந்து வசூலிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பேரிடரினால் மின்சாரசபையின் மின் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகள் பாரிய சேதங்களை சந்தித்திருக்கின்றது. மின் கடத்தல் கடமைப்பு சுமார் 1 பில்லியன் ரூபாய் பெறுமதியான நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இவை 132,000 கிலோவோட் போன்ற மிக உயர் மின் அழுத்தத்தை பெரிய கோபுரங்கள் மூலம் நீண்ட தூரத்திற்குக் கடத்தும் கட்டமைப்புகளாகும். மின் விநியோகக் கட்டமைப்புக்கு சுமார் 19 பில்லியன் ரூபா பெறுமதியான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவை துணை மின்நிலையங்களிலிருந்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சிறிய மின் கம்பங்கள் மூலம் மின்சாரத்தை விநியோகிக்கும் கட்டமைப்புகளாகும். இந்த நஷ;டத்தை நுகர்வோரிடமிருந்து வசூலித்து ஈடு செய்ய முயற்சிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய, செலவை ஈடுசெய்யும் விலைக் கொள்கையை மின்சாரசபை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். மின்சாரசபை அண்மையில் வருமானத்தை 11.57 சதவீதத்தால் அதிகரிப்பதற்காக
மின் கட்டண உயர்வைக் கோரியிருந்தது. இருப்பினும், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) கட்டணத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தற்போதைய சூழலில் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், அடுத்த காலாண்டு மீளாய்வின் போது மின்சாரசபை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகும்.
2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் கட்டணங்கள் மாற்றப்படாவிட்டால், அடுத்த முறை சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய மிக அதிக விகிதத்தில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம் என ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















