-சுகாதார அமைச்சர் நளிந்த விளக்கம்-
முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் வடமாகாண சுகாதாரசேவை அலுவலகம் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், சிலாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற 12 வயது சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் 2025 டிசம்பர் 21ஆம் திகதியன்று இரவு 7.20 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அதன்போது வெளிநோயாளர் பிரிவில் இருந்த வைத்தியர் அந்த சிறுமியை சிறுவர் வாட்டுக்கு மாற்றாமல் அவசர சிகிச்சைப் பிரிவுக்கே மாற்றினார். 5 நிமிடங்களில் அவரை அங்கு அனுமதித்தார்.
இந்த வைத்தியசாலை மாவட்ட பொது வைத்தியசாலை பிரிவுக்குள் உட்பட்டது. அதன் பணிப்பாளர் அன்றைய தினத்தில் விடுமுறையில் இருந்தார். குறித்த சிறுமி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றிய பின்னர் சிறுவர் பிரிவில் இருந்த சிறுவர் வைத்தியர் ஒருவர், அந்த சிறுமியை பரிசோதித்தார். அதன்போது சிறுமிக்கு உணவு ஒவ்வாமை அறிகுறிகள் இருந்துள்ளது. பரிசோதனைகளுக்கமைய சிறுவர் பிரிவு வைத்தியர் பரிந்துரைத்த சிகிச்சை சிறுமிக்கு வழங்கப்பட்டது.
சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சட்டப்படி, விசாரணைகள் இடம்பெற்று இடைக்கால அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் இறுதி அறிக்கை கிடைத்த பின்னர் விளக்கமான அறிக்கை முன்வைக்கப்படும். இதேவேளை இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிறுமியின் மரணம் தொடர்பில் மரண பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி அந்த பரிசோதனையின் மாதிரி அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்த பின்னர் மேலும் விடயங்களை முன்வைக்க முடியும் என்றார்.


















