-பிரதமர் – எதிர்க்கட்சித் தலைவர் இடை உடன்பாடு-
அரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூக பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, அரசியலமைப்பு சபையில் சிவில் சமூக பிரதிநிதிகளாக பேராசிரியர் வசந்த யஸ்யானவிரத்ன, ஆஸ்டின் பெர்னாண்டோ மற்றும் ரஞ்சித் ஆரியரத்ன ஆகியோரை நியமிக்க இணங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் சிவில் சமூக உறுப்பினர்களாக முன்னர் பணியாற்றிய டாக்டர் அனுஜா விஜேசுந்தர, டாக்டர் பிரதாப் ராமானுஜம் மற்றும் பேராசிரியர் தியான்ஷா சமரரத்ன ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 16 ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து, இந்தப் புதிய பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
அரசியலமைப்பின் படி, சட்டமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக உறுப்பினர்கள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒப்புதலுடன் சபாநாயகரால் நியமிக்கப்பட வேண்டும்.
புதிய வேட்பாளர்களில், பேராசிரியர் வசந்த யசயனவிரட்ண தற்போது கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தில் பொது சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி வருகின்ற நிலையில் ஆஸ்டின் பெர்னாண்டோ பொது சேவையில் பல மூத்த பதவிகளை வகித்த அனுபவம் வாய்ந்த அதிகாரியாவார்.
ரஞ்சித் ஆரியரத்ன இலங்கை நிர்வாக சேவையில் ஒரு புகழ்பெற்ற மூத்த அதிகாரியும் ஆவார்.இந்த பரிந்துரைகளுடன், 10 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மேலவையின் அமைப்பு மீண்டும் நிறைவடைய உள்ளது.


















