-எதிர்க்கட்சிக்கு அமைச்சர் நளிந்த நேரடி சவால்-
இயலும் என்றால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்துக் காட்டுங்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்க் கட்சியினருக்கு சவால் விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
எதிர்க்கட்சியினர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்திருந்தால் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பல விடயங்களை எம்மால் வெளிப்படுத்தியிருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை.
6 ஆம் தர புத்தகத்தில் எந்த இடத்தில் ஆபாசம் உள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட வேண்டும். அதேபோல் பல நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகத்தை பார்க்கும் போது தன்பாலின உணர்வு எவ்வாறு தோன்றுகிறது என்பதையும் சஜித் குறிப்பிட வேண்டும். பாடப்புத்தகத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் கைகோர்த்து உரையாடிக் கொண்டிருக்கும் படத்தை பார்த்தாலும் இவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
வானவில்லை பார்த்தால் பிள்ளைகளுக்கு தன்பாலினத்தவர்கள் நினைவுக்கு வருவார்கள் என்று உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். இவர்களிடம் தான் பிரச்சினைகள் உள்ளன. மாணவர்களுக்கோ, பெற்றோருக்கோ எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஆபாசம் என்று குறிப்பிட்டுக் கொண்டு புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தவறான நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் தான் தோற்றுவித்தார்கள். எதிர்க்கட்சியினர் தான் மாறுப்பட்ட வகையில் செயற்படுகிறார்கள். இவர்களுக்கு சார்பாக உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளார்கள். நாமல் ராஜபக்ஷவும் இவர்களின் கூட்டணியில் உள்ளார்கள். வெட்கமில்லாமல் இலவச கல்வி பற்றி பேசுகிறார்கள்.
பிரதமருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், ஹிஸ்புல்லா உட்பட முஸ்லிம் கட்சிகளும் கைச்சாத்திடவில்லை. நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க 20 பேர் கைச்சாத்திட்டால் போதும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இன்னும் கையொப்பம் பெறுகிறார் என்று தெரியவில்லை. ஆகவே தயவு செய்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள் அப்போது பல விடயங்களை வெளிப்படுத்துகிறோம்.
புதிய கல்வி மறுசீரமைப்பில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை திருத்திக் கொண்டு 21 ஆம் நூற்றாண்டுக்கு பொருந்தும் வகையில் புதிய கல்வி மறுசீரமைப்பை அமுல்படுத்துவோம் என்றார்.


















