கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்த பெண் ஒட்பட 6 சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றதாக, பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. வுpசாரணைகளின்படி நேற்றுமுன்தினம் சந்தேகநபர் ஒருவர் 11 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க நெக்லஸ் ஒன்றுடன் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் பெண் ஒருவர் உட்பட மேலும் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 62 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 03 திருடப்பட்ட கைக்கடிகாரங்கள், ஒரு ஜோடி தங்க காதணிகள் மற்றும் 02 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் 02 வாசனை திரவிய போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
ஆண் சந்தேகநபர்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேகநபர் 29 வயதுடையவர் எனவும், அவர்கள் நாரஹேன்பிட்ட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட மேலும் இரு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், திருடப்பட்ட பொருட்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டு அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


















