கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கும் பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான பிரதான கழகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டி சிசிசி மைதானத்தில் புதன்கிழமை (30) பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.
பிரதான கழகங்களுக்கு இடையிலான (Major Clubs Limited Overs) மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.
இரண்டு குழுக்களில் 14 கழகங்கள் பங்குபற்றிய 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவிலிருந்து பொலிஸ் விளையாட்டுக் கழகமும் தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக் கழகமும் பி குழுவிலிருந்து சிசிசியும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகமும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.
முதலாவது அரை இறுதிப் போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை 4 விக்கெட்களால் பொலிஸ் விளையாட்டுக் கழகமும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் கழகத்தை 68 ஓட்டங்களால் சிசிசியும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.
இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள சிசிசி, பொலிஸ் ஆகிய இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக இருப்பதால் இறுதிப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை இந்த இறுதிப் போட்டி சிசிசி அணியின் சொந்த மைதானத்தில் நடைபெறுவதால் அதற்கு அனுகூலமான முடிவு கிட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள்
சிசிசி: நிஷான் மதுஷ்க, லசித் குரூஸ்புள்ளே, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சொனால் தினூஷ (தலைவர்), சஹான் கோசல, சமிந்து விஜேசிங்க, நிஷான் பீரிஸ், விஷ்வா பெர்னாண்டோ, நுவன் துஷார.
பொலிஸ்: தனுஜ இந்துவர, நதீர பாலசூரிய, குசல் பெரேரா, விஷாத் ரந்திக்க, அஷேன் பண்டார (தலைவர்), ப்ரியமல் பெரேரா, ஜேசன் பெர்னாண்டோ, நவீன் பெர்னாண்டோ, டிலும் சுதீர, சாருக்க ப்ரமோத், நலின் ப்ரியதர்ஷன.


















