-பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர்-
ஐந்து கிராமுக்கு அதிகமாக போதைப் பொருளை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் குளிர்பானம், பஞ்சு மிட்டாய், ரொபி, பிஸ்கட் போன்றவற்றைப் பயன்படுத்தி பாடசாலைகளில் மாவா மற்றும் பாபுல் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெளிவுபடுத்தியதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஏற்கனவே 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி 5 கிராமுக்கு மேல் கொக்கேன், ஐஸ் மற்றும் ஹெராயின் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.


















