கல்வி மறுசீரமைப்பின் கீழான தரம் 6 பாடத்தொகுப்பில் பிழைகள் உள்ளதை ஜனாதிபதி ஒப்புக்கொண்டு அதனை ஒரு வருடத்திற்கு பிற்போட்டமையால் அமைச்சரவைக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான, கல்வி மறுசீரமைப்பிற்கு ஆதரவான போராட்டங்கள் பிரதமரின் தூண்டுதலில் நடப்பதாகவும் தெரிவித்தார்.
6ஆம் வகுப்புக்கான கல்வி மறுசீரமைப்பு நடடிக்கை பிற்படுத்தப்பட்டதால் அரசாங்கத்துக்குள் ஏற்பட்டி ருக்கும் குழப்பம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி அமைச்சராக பிரதமர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கல்வி மறுசீரமைப்பில், 6 ஆம் வகுப்பு பாடத்தொகுப்பில் பிழை இருப்பதால், அந்த நடவடிக்கையை ஒரு வருடத்துக்கு பிற்படுத்துவதற்கு ஜனாதிபதி அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அமைச்சரவையின் இந்த தீர்மானத்துக்கு பின்னர் அமைச்சரவைக்குள் இந்த அரசாங்கம் பிளவுபட்டிருக்கிறது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை பாதுகாக்க வேண்டும் என்ற விடயத்தைக்கூட அறியாமல் 6ஆம் வகுப்புக்கான பாடத்தொகுப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில அமைச்சர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பாடத்தொகுப்பில் பிழை இருப்பதை ஏற்றுக்கொண்டதாலே ஜனாதிபதி அதனை ஒருவருடத்துக்கு பிற்படுத்துவதற்கு தீர்மானித்தார். அதனைக்கூட இவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் எதிர்க்கட்சிகள் தெரிவித்ததற்காக ஜனாதிபதி பிற்படுத்தவில்லை. 6ஆம் வகுப்பு பாடத்தொகுப்பில் இருந்த ஆபாச வலைத்தளம் மற்றும் வேறு சில பிழைகளை திருத்திக்கொண்டு அதனை முன்னெடுத்துச் செல்லுமாறே நாங்கள் தெரிவிக்கிறோம்.
அவ்வாறு இல்லாமல் பொதுவாக கல்வி மறுசீரமைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்த மறுசீரமைப்பை முன்னெடுப்போம். அதேநேரம் பிரதமரின் கல்வி மறுசீரமைப்பை பிற்படுத்த ஜனாதிபதி எடுத்த தீர்மானத்துக்கு எதிராக இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னால் பிரதமரின் ஆதரவாளர்களே இருக்கின்றனர். பிரதமரே ஜனாதிபதிக்கு எதிராக இதனை மேற்கொள்கிறார். அதனால் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் கல்வி அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு தெரிவிக்காமல், இதனை பிற்படுத்திய ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் சென்றே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்.
ஓரினச் சேர்க்கையை கல்வி மறுசீரமைப்பில் புகுத்தியதாலேயே இந்தப் பிரச்சினை ஆரம்பித்தது. இந்த ஆபாச பகுதியை நீக்கிவிட்டு கல்வி மறுசீரமைப்பை முன்னெடுத்துச்செல்ல நாங்கள் ஆதரவு. ஆனால் இவர்கள் அதற்கு விருப்பம் இல்லை. பாலியல் கல்வி மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் என்ற போர்வையில், ஓரின சேர்க்கையின் பால் மாணவர்களை வழிநடத்துவதே இவர்களின் கொள்கையாகும். அதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. ஓரினச் சேர்க்கையை சட்ட ரீதியில் அனுமதித்துக்கொள்ளவே இவர்கள் முயற்சித்தார்கள். அதனை செய்ய முடியாமல் போனதால், இது மறைமுகமாக மேற்கொள்ளும் முயற்சியாகும் என்றார்.


















