ஆசிரியர் சேவையில் உடனடியாக இணைக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, இலங்கை பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
இன்று காலை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டமையால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறையின் போது, சுமார் 7 ஆண்டுகளாக பாடசாலைகளில் கற்பித்துவந்த தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் இணைக்கக் கோரி, கடந்த 26 ஆம் திகதி இலங்கை பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தது.
இதன்போது, அதிகாரிகளிடமிருந்து சரியான பதில்கள் கிடைக்காமையால், அன்றிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நால்வரில், ஒரு பெண் ஏற்கனவே உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்றும் ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் மற்றைய இருவரும் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

















