வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை போலி ஆவணங்களாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட யடிநுவர பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.
குறித்த சந்தேகநபர் 11 பேருக்கு கனடாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சத்திற்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து போலி கடிதத் தலைப்புகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் நிழற்பிரதிகள் மற்றும் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் இரகசியமான முறையில் தங்கியிருந்து இந்த மோசடியை வழிநடத்தி வந்த போதே கடந்த ஜனவரி 26 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
கண்டி, பிலிமத்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், யடிநுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராகவும், மத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் பணியாளராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளின் மூலம், இவர் கடந்த சில வருடங்களாக இவ்வாறான போலி ஆவணத் தயாரிப்பு மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இவருக்கு எதிராக கண்டி நீதிமன்றில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


















