-நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நம்பிக்கை-
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல் கல்வி மறுசீரமைப்பின் ஊடாக கல்வியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, சரியான புரிதல் இல்லாமலே கல்வி மறுசீரமைப்பை எதிர்க்கிறார்கள் எனவும் கூறினார்.
மட்டக்களப்பில் நேற்று நடைறெ;ற ஆறொ 360 டிஜிட்டல் இலத்திரனியல் செயலி அங்குரார்ப்பண நிகழ் வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
இந்த நாட்டில் புதியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டதைப் போன்றே, கல்வி முறையிலும் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே எமது அரசின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது.
உலகளாவிய ரீதியில் வளர்ச்சிப் பாதையில் நாடுகள் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது கல்வித்துறை. அந்தத் துறையின் ஊடாகப் பல முன்னேற்றங்களை அந்த நாடுகள் அடைந்துள்ளன. அவ்வாறான நாடுகளின் வளர்ச்சிக்குக் கல்வித்துறைதான் முக்கிய பங்காற்றி வந்துள்ளது.
அதைப் போன்றுதான் நாங்களும் இந்த கல்விச் சீரமைப்பை உருவாக்கியுள்ளோம். கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்கள் பல கல்விச் சீர்திருத்தங்களை உருவாக்கியிருந்தன. ஆனால் அவை அனை த்தும் இறுதியில் தோல்வியையே தழுவின.
எமது பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கல்விச் சீரமைப்பானது விசேடமாகப் பல நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. நவீன முறைமையிலான அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய மனப்பாடம் செய்யும் முறைமையின் ஊடாக ஒரு பரீட்சையை எழுதிச் சித்தியடைந்து தொழிலுக்குச் செல்லும்போது, அவர்களால் சரியான இலக்கை அடைய முடியாத நிலைமையே காணப்படுகிறது.
இந்த புதிய கல்விச் சீரமைப்பின் ஊடாகப் புதிய மாற்றங்களை நாம் உருவாக்க இருக்கின்றோம். அவர்கள் தங்களது கல்வியை நிறைவு செய்து செல்லும்போது ஒரு தொழில் வல்லுநர்களாகச் செல்லும் விதமாக இந்தக் கல்விச் சீர்திருத்தம் அமைந்திருக்கின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அதில் இருக்கும் சொற்பதங்களைத் தான் பிழை யெனக் கூறுகிறார்களே தவிர, அவர்களுக்குச் சரியான புரிதல் இல்லை என்றே நான் கருதுகின்றேன். எனவே, இந்த நல்லதொரு விடயத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் புதிய மாற்றத்தினை உருவாக்க முன்வர வேண்டும் என்றார்.


















