சட்டத்தரணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரினால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடந்த 30 ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான இரண்டு சட்டத்தரணிகள்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும் தாக்கியுள்ளதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
சட்டத்தரணிகள் தங்கள் வாகனத்தில் புறப்படும்போது, நுகேகொடை கம்சபா சந்திக்கு அருகில் வீதியை மறித்து, காரைச் சுற்றி வளைத்து, கொலை மிரட்டல் விடுத்து, வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மிரிஹான பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, நேற்று அதிகாலை, மாதம்பே – கஜுலந்தவத்தை பகுதியில் சந்தேகநபரை கைது செய்தனர்.
சட்ட விரோதமாக தடைசெய்தல், குற்றவியல் மிரட்டல், குறும்பு செய்தல் மற்றும் சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்றல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் மாதம்பே, கஜுலந்தவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைது செய்து நீதி மன்றங்களில் ஆஜர்படுத்த, பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.


















