-விசேட நிபுணர்கள் சங்கம் விலகல்-
சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு, உபகரணப் பற்றாக்குறை மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் தொழிற் சங்க நடவடிக்கையில் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்திய நிபுணர்கள் எவ்விதத்திலும் கலந்துகொள்ளப் போவதில்லை என அந்தச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் அசோக குணரத்ன தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிகிச்சைக்காக வருகை தந்திருந்த நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததுடன், தமது விசனத்தையும் வெளியிட்டிருந்தனர். வைத்தியர்களின் இந்த நடவடிக்கையினால் ஏழை மக்களே இறுதியில் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்திய நிபுணர் அசோக குணரத்ன, தமது சங்க உறுப்பினர்களான அனைத்து விசேட வைத்திய நிபுணர்களும் வழமைப் போல பணிகளுக்குச் சமூகமளிப்பார்கள் என்றும், இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையில் தாம் இணையப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


















