போதைப் பொருள் கடத்தல்காரன் அல்டோ தர்மே என்ற தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிசை வலய குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் ஆயுதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸை வலய குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, அண்மையில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைது நடவடிக்கையின்போது சந்தேகநபர்களிடமிருந்து 3 கூர்மையான வாள்கள், 15 கிராம் ஹெரோயின் மற்றும் 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதான நபர்கள் கடந்த காலங்களில் மொரட்டுவை, இரத்மலானை மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளில் மற்றொரு குற்றக் கும்பலைச் சேர்ந்த தரப்பினர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி, பாரதூரமான காயங்களை ஏற்படுத்திய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.
இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான தர்மசிரி லியனகே எனும் அல்டோ தர்மே என்பவரின் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


















