-ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு மகஜர்-
அரசியல் தீர்வு எட்டப்படும்வரை சர்வதேச மேற்பார்வையின் கீழ் இடைக்கால நிர்வாக பொறிமுறை ஒன்றை அமைக்கவேண்டும் என கோரி ஐ.நா பொதுச் செயலாருக்கு மகஜர் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் நிறைவில் இந்த மகஜர் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழர்களாகிய நாம் மரபுவழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை உலகுக்கு மீண்டும் பிரகடனப்படுத்துகின்றோம்.
ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தர அரசியல் தீர்வை காண்பதற்காக மீண்டும் ஒரு தடவை எமது ஏகோபித்த வெளிப்படுத்தலை வலியுறுத்திக் கூற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இன்று பேரெழுச்சியாக நாம் திரண்டுள்ளோம். இலங்கைத் தீவின் வரலாற்றில் தமிழர்களும், சிங்களவர்களும் தம்மைத் தாமே ஆழும் சுயாதீன இராட்சியங்களை கொண்டிருந்தனர். ஆனால், வரலாற்றை புறக்கணித்து எண்ணிக்கையில் பெரும்பான்மை அடிப்படையில் முழு நாட்டினதும் அதிகாரங்கள் சிங்கள தேசத்திடம் பிரித்தானியர்களால் கைமாற்றப்பட்டது.
1948 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்ததிலிருந்து அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் சிங்களவர்களுக்கு கடும் தேசிய வாதத்தைப் போசித்தும், ஊக்கப்படுத்தியும் வந்துள்ளதோடு, தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு தமது இராணுவ பலத்தை பயன்படுத்தி வருவதை உலக நாடுகளும் பாராமுகமாக இருப்பதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.
சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியான சுதந்திர தமிழின அரசை அமைப்பதற்காக 1976 ஆம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு 1977 ஆம் ஆண்டு நடை பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஆணை வழங்கி தமது சுதந்திர வேட்கையை வெளிப் படுத்தியிருந்தனர் என்பதை பன்னாட்டு சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களின் தேசிய இன பிரச்சனைக்கு அரசியல் வழியில் தீர்வு காண்பதற்குரிய நடைமுறைகளில் முன்னேற்றம் காணப்படாததன் விளைவாக தமிழரின் ஆயுதப் போராட்டம் தொடர்ந்ததோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழரின் அரசியல் இராணுவ பலமாக மேலெழுந்து அடுத்து அடுத்துவந்த ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களுடன் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் செய்துகொண்ட போதிலும் சிங்கள ஆட்சியாளரின் நேர்மையற்ற அணுகுமுறைகளால் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகள் எதுவும் எட்டப்பட முடியவில்லை என்ற கசப்பான உண்மை கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
77 தமிழர் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளை கடந்த வருடங்களுக்கு மேலாக அடுத்தடுத்து ஆட்சிக்குவந்த சிங்கள ஆட்சியாளர்களின் துணையோடு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட, நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலைகளின் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அதியுயர் இனவழிப்பு படுகொலைகள் உட்பட மனித படுகொலைகள், நிலங்களை கையகப்படுத்துதல், பாலியல் வன்முறைகள், கலாச்சாரம் மற்றும் பொருளாதார கட்டுமானங்களை அழித்தல் போன்ற வன்முறைகள் மூலம் தமிழ் மக்களுடைய தேசத்துக்கான தகுதிப்பாட்டை தாங்கி நிற்கும் அனைத்து கட்டுமாணங்களும் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
இறுதிப் போரில் இனப்படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த அனைத்துலக சமூகம் இன்னமும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை. காலத்தை இழுத்தடித்து கடப்பாட்டை தட்டிக்கழிக்கும் ஸ்ரீலங்காவின் வழக்கமான தந்திரபாயங்களுக்குள் உள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு கடந்த 17 வருடங்களாக நீதி கோருவதும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதும் தான் தமிழரின் போராட்டமாக மாறியிருக்கிறது.
ஒவ்வொரு கரி நாள் ஒவ்வொரு முறை வரும்போதும் எமது உரிமையை வலியுறுத்தி போராட வேண்டிய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டு நிற்கின்றது.
நாம் எமது தாயகத்தில் ஒட்டுமொத்த அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான முயற்சி இனி தீவிரம் பெறவேண்டும். இல்லையேல் புதுப்புதுப் பிரச்சினைகளை முளைவிடச் செய்து சிங்கள தேசம் தமிழரின் உரிமைப் போராட்டத்தை திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்துவிடும் ஆபத்து உள்ளது.
தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக தமிழ்த்தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பது மட்டுமே மேலே குறிப்பிட்ட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் மீள நிகழாது இருப்பதை உறுதி செய்யும் என்பதை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். பயங்கரவாத தடைச் சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம், நீக்கப்பட வேண்டும். தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள பாதுகாப்பு திணைக்களம், மகாவலி அபிவிருத்தி திட்டம், கிவுல் ஒயாத்திட்டம் என்னும் போர்வையில் நில அபகரிப்புத் திட்டங்களும் உடனடியாக நிறுத்தப்படுவதோடு, அபகரிக்கப்பட்ட காணிகள் உரியவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சிங்கள குடியேற்றங்களும், திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் முயற்சிகளும் நிறுத்தப்படவேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். இராணுவம் வெளியேற வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன் அவர்களுக்கு சர்வதேச நீதி வழங்கப்படுவதோடு குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். மனித புதை குழிகள் சர்வதேசத்தின் மேற்பார்வையில் அகழப்பட்டு உரிய நீதி விசாரணைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இறுதி அரசியல் தீர்வொன்று எட்டப்படும்வரை தமிழ் மக்கள் தமது தாயகத்தின் அன்றாட விவகாரங்களை நடாத்துவதற்கு இடைக்கால நிர்வாகப் பொறிமுறையொன்று சர்வதேசத்தின் மேற்பார்வையில் உருவாக்கப்படவேண்டும் என்றுள்ளது.


















