-இந்த வேறுபாட்டை பலமாக மாற்றுவோம் – ஜனாதிபதி அழைப்பு-
-ஒவ்வொரு இனக்குழுக்களினதும் தனித்துவத்தை அங்கீகரிப்போம்-
இலங்கையில் இரு தாய்மொழிகளை கொண்ட மக்கள் வாழ்கின்றார்கள், நம்பிக்கைள், கலாச்சாரங்கள், வழிபாடுகளில் வேறுபாடுகளும் உள்ளன. இந்த வேறுபாடுகளை மற்றவர்களுக்கு எதிரான ஆயதமாக அல்லது மோதலுக்காக உயர்த்திப் பிடிக்கலாம். ஆனால், அது நம்மை பலவீனப்படுத்தும்.
எங்களுடைய அபிலாஷை ஒன்றுதான், இந்த வேறுபாடுகளை மதித்து, ஒவ்வொரு இனக் குழுக்களினதும் தனித்துவத்தை அங்கீகரித்து இலங்கையாராக இந்த நாட்டில் வாழ்வது தான். அவ்வாறான யுகம் எமக்கு இப்போது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இலங்கையின் 78வது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில்,
இலங்கை பல்வேறு மதத்தவர்கள் வாழுகின்ற ஒரு நாடாகும். இங்கே இரு தாய்மொழிகளை கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். நம்பிக்கைகள், கலாச்சாரங்கள், வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகளும் உள்ளன. இவற்றை மோதலுக்காக அல்லது மற்றவர்களுக்கு எதிரான ஆயுதமாக தூக்கிப் பிடிக்க முடியும். ஆனால் அது நம்மை பலவீனப்படுத்தும்.
எங்கள் அபிலாசை இந்த வேறுபாடுகளை மதித்து ஒவ்வொரு இனக்குழுக்களின் தனித்துவத்தை அங்கீகரித்து இலங்கையர்களாக சிந்திக்ககூடிய மாற்றத்திற்கான யுகம் ஒன்றை உருவாக்குவது தற்போது அவசியம். அதற்கு, எமது அகராதியில் உள்ள மிகவும் அசிங்கமான இரு சொற்கள் தடை. இந்த இரு சொற்கள் என்னவென்றால், இனவாதம் மற்றும் மதவாதம் இவற்றினால் எங்களுடைய கூட்டுப்பலம் பலவீனப்படுத்தப்படுகிறது. அதனாலேயே இந்த நாட்டில் மதவாம் – இனவாதத்திற்கு இடமில்லை என்பதை மீண்டும்..மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டிருக்கின்றோம்.
எமது நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான பிரதான பலத்தை கட்டியெழுப்புவோம் என்பதை எமது நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறோம். அடுத்த பிரதான விடயம் என்ன? அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சியை சமமாகவும் நியாயமாகவும் நிலைநாட்ட வேண்டும்.
நாம் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். நவீன இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். அனைவரும் சட்டமெனும் கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும். எமது நாட்டு பிரஜைகள் மத்தியில் சட்டத்தின் ஆட்சி தொடர்பிலான நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். எந்தவொரு நியாயமான நபரும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு அச்சமடைய மாட்டார்.
அனைத்து நியாயமான நபரும் சட்டத்தின் ஆட்சியை எதிர்பார்ப்பதாக நாம் அறிவோம். ஆனால் சட்டத்தின் ஆட்சியை ஓரங்கட்டுகின்றனர். வீழ்த்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படுவதற்கு அஞ்சுகின்றனர்.
எமக்கு வழங்கப்பட்டுள்ள ‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற பொறுப்பிற்கு சட்டத்தின் ஆட்சியை முறையாக உறுதிப்படுத்துவதிலே உயிரோட்டம் ஏற்படுகிறது. எமது நாட்டை கட்டியெழுப்புகையில் எமக்காக மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கு உகந்த தேசத்தை உருவாக்க வேண்டும்.
எமது நாட்டை மீண்டும் சர்வதேசத்தில் மிகவும் உயர்ந்த மற்றும் கௌரவமான தேசமாக மாற்றுவதே நாம் செல்லும் இந்தப் பாதையில் மிகவும் முக்கிய காரணியாகும். ‘உங்களுக்கு வேகமாகச் செல்ல வேண்டுமெனில் தனியாகச் செல்லுங்கள். ஆனால் வெகுதூரம் செல்ல வேண்டுமெனில் ஒன்றாகச் செல்லுங்கள்’ என்று ஆபிரிக்கப் பழமொழி ஒன்று சொல்கிறது என்றார்.


















