-இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு-
இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இந்திய கடலோர காவல் படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக வெளியான ஊடக செய்திகளை மேற்கோள்காட்டி இந்திய உயர்த்தானிகராலயம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய கடற்படையினர் அல்லது கடலோர காவல் படையினர், அத்தகைய தாக்குதல் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் என உயர்ஸ்தானிகராலயம் மேலும் கூறியது.
மீனவர்களின், வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படவேண்டும் எனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலாத்காரப் பிரயோகம் மேற்கொள்ளப்படக்கூடாது எனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், இவ்விடயங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு மீன்பிடிப் படகுகளில் சென்ற 12 இலங்கையர்கள், இலங்கைக் கடல் எல்லைக்குள் இருந்தபோது, ஜனவரி 29 அன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் தாக்கப்பட்டதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியிருந்தது. சர்வதேசக் கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.


















