நாட்டின் பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றியும், அந்தக் குடும்பங்களைச் சுற்றியுள்ள திருடர்களின் வளையத்தைச் சுற்றியும் குவிந்திருந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து பொருளாதார நன்மைகளின் பலன்களும் நாட்டின் பொருளாதார நிலையில் கீழ் மட்டத்திலுள்ள மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற டித்வா சூறாவளியால் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகள் சேதமடைந்த தனிநபர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வின் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது எந்தவொரு அரசாங்கத்தினதும் அடிப்படைப் பொறுப்பாகும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது எதிர்கொள்ளும் அழிவுகளையும் பிரச்சினைகளையும் நேரடியாக நாம் அனுபவித்தோம். இந்நாட்டு மக்கள் மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையாலும், எரிபொருளுக்காகவும், பால் மாவுக்காகவும் வரிசைகளில் நின்று துன்பப்பட்டனர். நமது நாடு நீண்ட காலமாகப் பின்பற்றி வந்த பொருளாதாரக் கொள்கைகளாலும், அந்தக் கொள்கைகளுடன் தொடர்புடைய இலஞ்சம், மோசடி மற்றும் ஊழல்களாலும் நமது நாடு பெரும் பொருளாதார சரிவைச் சந்தித்தது. அன்று, இந்நாட்டில் பல அபிவிருத்தித் திட்டங்கள் பொருளாதாரத் தேவையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை.
அரசியல் நலன்களுக்காகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களுக்காகவும் கட்டுமானம் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்ட, கட்டுமானம் முடிக்கப்பட்டு கைவிடப்பட்ட சுமார் 1800 அரச கட்டிடங்கள் இருப்பதாக அண்மைய அறிக்கை கூறுகிறது.
சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமை, அந்தந்த சமயங்களில் அரசியல்வாதிகளின் தேவைகள், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு வழிவகுத்தன.
நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற பிறகு, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதே எமது முதன்மையான பணியாக மாறியது. அது இல்லாமல், சட்டத்தின் ஆட்சி, சமூக நீதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வீதிக்கட்டமைப்பு பற்றி சிந்திக்கவே முடியாமல் போனது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்த நாட்டின் பொருளாதாரம் பல முக்கிய காரணிகளால் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாடாக நாம் அடையும் இந்த பொருளாதார வெற்றிகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். ஆனால் வரலாற்றில் நடந்திருப்பது என்னவென்றால், பொருளாதார நன்மைகள் ஒரு சில குடும்பங்களைச் சுற்றி குவிந்துள்ளன.
மக்களின் பணத்தில் ஒரு சதத்தையேனும் பெற்றுக் கொள்ளும் எண்ணம் எமக்குக் கிடையாது. நாட்டின் பொருளாதார வெற்றிகளை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் பகிர்ந்தளிப்பதே எமது நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.


















