இலங்கையில் உள்ள சிறுவர் புற்றுநோயாளர்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான உயர்தரம் மிக்க மருந்துகளைத் தடையின்றிப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் சுகாதார அமைச்சு விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிறுவர் புற்றுநோய்க்கான மருந்து விநியோகத்தை பலப்படுத்தப்படுவதுடன், தரமான மருந்துகளைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் செயின்ட் ஜூட் சிறுவர் ஆராய்ச்சி வைத்தியசாலை ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்பப் பங்களிப்புடனும் , யுனிசெப் மற்றும் அமெரிக்க பிராந்திய சுகாதார நிறுவனம் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட உள்ளன.


















