-சுவிட்ஸர்லாந்து தூதரகம் முயற்சி-
-பெப்-19 தமிழ்த் தரப்புடன் சந்திப்பு-
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கை – சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.
அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.
அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார்.
இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்பன விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


















