ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பிரதேச செயலகங்கள் ஊடாகப் பரவலாக்கப்பட்டதன் விளைவாக, மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 59 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 47 ஆண்டுகளாக கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிய இந்தச் சேவைகள், தற்போது நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் வாயிலாகக் கிடைப்பதால், பொதுமக்கள் தமது இருப்பிடத்திற்கு அருகிலேயே விண்ணப்பிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்படி, 2024 ஆம் ஆண்டு 3,313 ஆக இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டில் 5,277 ஆக உயர்ந்துள்ளதுடன், விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்கனவே மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாகாண ரீதியில் நோக்கும்போது, இந்த புதிய நடைமுறையினால் வட மாகாணத்தில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 253 சதவீதத்தினால் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கு,மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்களவு உயர்வு பதிவாகியுள்ளது.


















