இலங்கை மின்சார சபையை கலைப்பதற்கான திகதியை வர்த்தமானி மூலம் அறிவித்தால், எவ்வித முன்னறிவிப்புமின்றி கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
இது தொடர்பாக 24 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளின் கையொப்பத்துடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கடந்த ஜனவரி 12 ஆம் திகதி தொழிற்சங்கங்கள் அமைச்சருக்கு சமர்ப்பித்திருந்தன.
இதுவரையில் அந்த கோரிக்கைகளுக்கு எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
கோரிக்கைகள் குறித்து மீண்டும் நினைவுபடுத்தி நேற்று முன்தினம் மற்றுமொரு கடிதம் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையைத் தவிர வேறு வழியில்லை என ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், மின்சார சபையை கலைப்பதற்கான திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டால், முன்னறிவிப்பு இன்றி மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட 24 தொழிற்சங்கங்கள் பணிப்பறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.


















