அரச துறையில் நிலவும் ஊழல் குறித்த உலகளாவிய தரவரிசையில் இலங்கை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளதாக டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான புதிய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி. 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டில் இலங்கை 35 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு பெற்ற 32 புள்ளிகளுடன் ஒப்பிடுகையில் 3 புள்ளிகள் உயர்வாகும்.
இதன்மூலம், கடந்த 10 ஆண்டுகளாக 121 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 182 நாடுகளில் 107 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த மதிப்பீடானது 0 (அதிக ஊழல்) முதல் 100 (மிகவும் தூய்மையானது) வரையிலான அளவுகோலில் கணக்கிடப்படுகிறது.
இலங்கையின் இந்தச் சிறு முன்னேற்றமானது, அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய ஊழல் எதிர்ப்பு மற்றும் சொத்து மீட்புச் சட்டங்கள் மற்றும் சட்ட அமுலாக்க வழிமுறைகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நிபுணர்கள் மற்றும் வணிகத் தரப்பினரிடையே கிடைத்துள்ள வரவேற்பைப் பிரதிபலிப்பதாக அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


















