-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்-
-த.அம்பிகாவதி-
கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆவரங்கால் -தொண்டைமானாறு வீதி மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று இப்பகுதி மக்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய நாள். ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதியைத் திருத்த வேண்டும் எனப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலமாக அது சாத்தியப்படாமலே இருந்தது. அந்தக் கனவு இப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் நடைமுறைக்கு வருகின்றது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்கு மக்கள் மீது விசேட கரிசனையுடையவர். அவர் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே, எமது மக்களின் துயரங்களை அறிந்தவர். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய அக்காலப்பகுதியில், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மக்களுக்கும் நிதி ஒதுக்கியிருந்தார். அந்தளவு தூரம் எமது மக்கள் தொடர்பில் அக்கறை கொண்டவர்.
எனவே, அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக உள்ள இக்காலத்தில், எமது மாகாணத்தின் அபிவிருத்திகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். இவ்வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















