ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரபாத் சந்திரகீர்த்தி , அரச சேவையில் 26 வருட கால அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவையில் 2000 பெப்ரவரி 15ஆம் திகதி இணைந்த அவர், 2010 இல் நிர்வாக சேவையின் தரம் ஒன்றுக்கு தரம் உயர்த்தப்பட்டார். 2019 இல் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றார். ஊவா மாகாண சபையின் கல்வி மற்றும் சுற்றுலா அமைச்சின் உதவிச் செயலாளரக 2001இல் முதல் நியமனம் பெற்ற அவர் 2003ஆம் ஆண்டு பியகம உதவி பிரதேச செயலாளராகப் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்தின் சபை முதல்வர் அலுவலகத்தின் உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டதோடு 2010 இல் சிரேஷ்ட உதவிச் செயலாளராக நியமிக்கப்பட்டு 2015 வரை பணியாற்றினார்.


















