பதும் நிஸங்கவின் அதிரடி சதத்தால் அவுஸ்திரேலியாவை துவம்சம் செய்தது இலங்கை அணி.
ரி-20 உலகக் கிண்ணத்தில்; இலங்கை -அவுஸ்திரேலியா இடையிலான போட்டி கண்டியில் நேற்று நடைபெற்றது.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவுஸ்திரேலியா களம் இறங்கியது.
நாணயச் சுழற்சியல்; வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி அவுஸ்திரேலியா அணியின் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மிட்செல் மார்ஷ் 54 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 56 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
கேமரூன் கிரீன் 3, டிம் டேவிட் 6 ஏமாற்றம் அளித்தனர். ஜோஷ் இங்லிஸ் 27 ஓட்டங்;களும், மெக்ஸ்வெல் 22 ஓட்டங்களும் அடித்தனர்.
அவுஸ்திரேலியா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் அடித்தது.
பந்துவீச்சில் ஹேமந்த 3, சமீரா 2, மென்டிஸ், வெல்லாஹே, தீக்சன தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் குசல் பெரேரா ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து குசல் மென்டிஸ் – பதும் நிஸங்க ஜோடி அவுஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தது. இருவரும் அரைச்சதம் கடந்தனர். குசல் மென்டிஸ் 51 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். பதும் நிஸங்க அதிரடியாக ஆடி 52 பந்தில் சதமடித்து அசத்த இலங்கை 16 ஓவரில் 184 ஓட்டங்கள் அடித்து 8 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்று சுப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்தது. பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.


















