இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏனைய திட்டங்களை முதலில் வெற்றிகரமாக முன்னெடுத்து, அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்த பின்னரே அடுத்தகட்ட தீர்மானங்களை எடுப்பதாக ஜெய்கா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பல்வகை போக்குவரத்து நிலையங்களின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இலகு ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் நாம் கலந்துரையாடியுள்ளோம். எனினும், அது குறித்து ஜெய்கா நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை.
தற்போதைய திட்டங்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டே அடுத்தகட்ட தீர்மானம் எடுக்கப்படும் என அந்த நிறுவனம் எமக்கு அறிவித்துள்ளது.
நாம் ஜப்பானில் வைத்து ஜெய்கா நிறுவனத்தின் தலைவர்களைச் சந்தித்த போதும் இந்த யோசனைகள் அனைத்தையும் முன்வைத்தோம்.
ஆனால், ஆரம்பமாகத் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏனைய திட்டங்களை முன்னெடுப்போம் என்றும், அவற்றின் முன்னேற்றத்தைப் பார்த்துவிட்டுத் தீர்மானம் எடுப்போம் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டது – என்றார்.


















