-ஆதரவாக 154 வாக்குகள்: எதிராக 2 வாக்குகள்
-கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
-மாதாந்தம் இனி 34.8 மில்லியன் அரசு சேமிக்கும்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான ‘நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்’ நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 152 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் பதிவாகின.
விவாதத்தின் போது ரவி கருணாநாயக்க மற்றும் சாமர சம்பத் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் நிராகரித்த நிலையில், சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இந்த சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமாக இது நடைமுறைக்கு வருகின்றது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் 1977 ஆம் ஆண்டின் முதலாம் ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் நீக்கப்படுவதுடன், தற்போது ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் அதற்கு உரித்துடையவர்கள் அனைவருக்கும் இனிவரும் காலங்களில் அந்த கொடுப்பனவு நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


















