அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்றம் நேற்று கூடியபோது சட்டத்தரணியும், அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்டமை தேசிய பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
முப்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் பகல் வேளையில் இவ்வாறான படுகொலை இடம்பெற்றமை மிகவும் பாரதூரமானது. இவ்வாறான கொலைகளைத் தடுக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்னவென்றும் அவர் வினவினார்.
இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமையவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நாட்டின் வௌ;வேறு இடங்களில் இடம்பெறும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை. பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 விசேட காவல்துறை குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்கள். ஏற்கனவே சிலர் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விபரங்களை வெளியிடுவது விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தற்போது தகவல்களை வழங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் கூறிய ‘பாதுகாப்பு வலயம் அல்ல’ என்ற கருத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் வாதிட்டார்.
இராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகிலுள்ள பகுதி என்பதால் அது நிச்சயமாகப் பாதுகாக்கப்பட்ட வலயமே என அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், குறிப்பிட்ட அந்த இடம் சட்டரீதியாக அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ளடங்காது என அமைச்சர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்தார்.


















