-ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன்-
உலக நாடுகள் மற்றும் ஐ.எம்.எப். உட்பட்ட பல சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசிடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக் கோரியும் இந்த அரசாங்கம் மிகப்பெரிய சட்ட மூலத்தை வெளியிட்டு உள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன் தெரிவித்தார்
தனிமனிதன் மற்றும் பொது அமைப்புகள், ஊடகம் சார்ந்தோரின் அடிப்படை கருத்து சுதந்திரம் முற்றாக ஒடுக்கப்படுகிறது. அடக்கு முறைக்கு உள்ளாகும் ஒரு குடும்பம் அல்லது சமூகம் தமது கருத்தை வெளியில் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.
பயங்கரவாத சட்டம் நிறைவேற்றப் பட்ட காலத்தில் இருந்து அதிகமாக தமிழ் மக்களே அதன் பிடியில் அழுத்தப்பட்டு தண்டனை அனுபவித்து வந்துள்ளனர்.
குறிப்பாக முன்னாள் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள் என கூறிக்கொண்டே போகலாம். இதனை ஓர் இனத்தின் மீது ஆயுதம் ஏந்தாமல் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறை என கருதியே பல பொது அமைப்புகள் நீக்குமாறு கோரிக்கை விடுத்தன.
ஆனால் அதனை விடவும் பல மடங்கு மோசமாக இந்த சட்ட கோர்வை காணப்படுகிறது. முக்கியமாக சட்டத்தின் பெயரில் கருத்து சுதந்திரத்தை முற்றாக அழித்து ஒரு சர்வதிகார போக்கை திணிப்பதே இதன் அடிப்படை போக்கு ஆகும்.
உலக நாடுகளிடம் தாம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் ஆனாலும் மக்கள் தாங்கள் கொண்டு வந்த புதிய சட்டக் கோர்வையை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் பயங்கரவாத தடுப்பு சட்டம் இருக்கட்டும் என கூறுகின்றார்கள் எனும் ராஜதந்திர போக்கிலே இவ்வாறான ஒரு மோசமான சட்டக் கோர்வையை கொண்டு வந்துள்ளனர் தேசிய மக்கள் சக்தியினர்.
தமிழ் மக்கள் கேட்பது எமக்கு எந்த பயங்கரவாத தடுப்பு சட்டமும் தேவையில்லை என்பதே என ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் இணைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான வேந்தன் தெரிவித்தார்.


















