-பிரமாண்ட பத்தலுக்கு 51 இலட்சம் : உணவுக்காக 31 இலட்சம்
-பொதுமக்களை ஏற்றி இறக்கிய பேருந்துகளுக்கு 25 இலட்சம்
-விருந்தினர் வரவேற்பு செலவுமட்டும் 23 ஆயிரத்து 375 ரூபாவாம்
-தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் அம்பலமான உண்மைகள்
-க.சபேஷன், பா.பிரதீபன், சொ.வர்ணன்-
யாழ்.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட ஒரு நிகழ்வுக்கு மட்டும் ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் பெரும் திரளான மக்கள் கூட்டத்தை அழைத்து வருவதற்காக மட்டும் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் யாழ்.வருகையின் போது மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளுக்கான செலவு விபரங்களை தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் மாவட்டச் செயலகத்தினால் தரப்பட்டுள்ள ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கான செலவு விபர அறிக்கைகளின் ஊடாகவே இவ்வாறான பெரும் தொகை நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் தைமாதம் பொங்கல் தினத்தில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மன்னாரில் காற்றாலை மின்சாரத்தை ஆரம்பித்து வைத்த நிலையில் அன்று மாலை வேலனையில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டார்.
அன்றைய தினமே மானிப்பாய் மருதடி ஆலயத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
மறுநாள் யாழ்.கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் ‘முழு நாடுமே ஒன்றாய்’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த நிகழ்வுக்கான நிதியை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பெடுத்த நிலையில் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து பெரும் எடுப்பில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட மண்டப ஒழுங்கமைப்பிற்கு மட்டும் 52 இலட்சத்து 37 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனவர்களுக்க வழங்கப்பட்ட சிற்றுண்டி, உபசரணைக்காக 31 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாவும் செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வைப்பதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து ஏற்றி வரப்பட்ட மற்றும் நிகழ்வு முடிந்த பின்னர் அவர்களை அங்கிருந்து ஏற்றிச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையிடம் 75 பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தியதற்காக 23 இலட்சத்து 43 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளுக்கு மட்டும் 51 ஆயிரத்து 700 ரூபாவாக செலவு செலவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிகழ்வின் வரவேற்பு செலவினமாக 23 ஆயிரத்து 375 ரூபாவும், குடிநீர் மற்றும் மலசல கூடத்திற்காக 36 ஆயிரம் ரூபாவும், முன்னாயத்த வேலைகள் மறுசீரமைப்புக்காக ஒரு இலட்சத்து 18 ஆயிரம் ரூபாவாகவும் ஏனைய செலவுகளுக்காக ஒரு இலட்சத்து 54 ஆயிரம் ரூபாவாகவும் செலவுவிடப்பட்டுள்ளதாக அறிவித்தல் தரப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது ஜனவரி 16 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற ‘இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மீள்குடியேற்ற வீடமைப்பு திட்டத்திற்கான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பொது மக்களை மைதானத்திற்கு அழைத்து வருவதற்காக 11 தனியார் பேருந்துகளை சேவைக்கு அமர்த்தியதாகவும், அதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், மாவட்ட செயலகம் தகவல் வழங்கியுள்ளது.


















