-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா-
நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றத்தில் முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா அண்மையில் வழங்கிய நேர்காணல் ஒன்றில், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை பாராட்டியிருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, தற்போதைய அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையில் காண்பிக்கும் அக்கறையையும் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளரின் சாதகமான நிலைப்பாட்டையும் அவர் வரவேற்றுள்ளார்.
தற்போதைய வெற்றிகளுக்கான அடித்தளம் முந்தைய ஆட்சியிலேயே போடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஹர்ஷ டி சில்வா, 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டது கடந்த அரசாங்கத்திலேயே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு மறை 7.3 சவீதமாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வீதமும், கடந்த அரசாங்கத்திலேயே 5 வீதமாக அதிகரிக்கப்பட்டது. இலங்கையின் முதலாவது தேசிய ஆளுமை கண்டறிதல் ஆய்வு முந்தைய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டது. எனவே தற்போதைய சீர்திருத்தங்கள் பாராட்டப்படும் அதேவேளை, இதன் ஆரம்பகட்ட வெற்றிகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.


















