ரணில் மீது வழக்கு தொடருவதற்கு பல லட்சம் செலவிட்டு தகவல் தேடியவர்களுக்கு வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ்; கிடைக்காமல்போனது ஆச்சரியத்திற்கு உரியது என ஐ.தே.கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னான்டோ கூறினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் பகுப்பாய்வு பல லட்சம் ரூபாய்களைச் செலவழித்து இந்த வழக்குக்காகத் தகவல்களைத் தேடியவர்களுக்கு, இவ்வளவு தெளிவான இந்த அழைப்பிதழ் கிடைக்காமல்போனது பெரும் ஆச்சரியத்திற்குரிய விடயம் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் உள்ளவர்கள் ஏன் இந்த ஒரு விடயத்தைப் பிடித்துக்கொண்டு இவ்வளவு தூரம் அலைகிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர், தங்களை விடவும் அறிவு ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உயர்ந்த மட்டத்தில் இருப்பவர்கள் மீதுள்ள பொறாமையாலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், இந்தப் பயணம் ரணில் விக்கிரமசிங்கவும் மைத்திரி விக்கிரமசிங்கவும் இணைந்து மேற்கொண்ட ஒரு சாதாரண சுற்றுலா அல்ல என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சிஐடி போன்ற நிறுவனங்களை ஏமாற்றுவது போல வுல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தை எவராலும் ஏமாற்ற முடியாது என்றும், அந்த நிறுவனம் யாருடைய விருப்பத்திற்கும் ஏற்றவாறு வாக்குமூலங்களை வழங்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு ஜனாதிபதி எங்கு சென்றாலும் அவர் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் என்பதைச் சுட்டிக்காட்டிய ஹரின் பெர்னாண்டோ, முழு விமானத்தையே வாடகைக்கு எடுத்துக்கொண்டு உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்ற ஜனாதிபதிகள் இருந்த இந்த நாட்டில், லண்டனுக்குச் சென்று வெறும் வெஜிடபிள் பிரியாணி சாப்பிட்டுத் தனது கடமையைச் செய்த ஒரு மனிதரை இன்று பழிவாங்கத் துடிக்கிறார்கள் என ஆவேசமாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும், இது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சியின் முடிவிற்கான ஆரம்பமாக அமையலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
இலங்கை சுற்றுலா தவறு செய்பவர்களுக்கு அதற்கான பிரதிபலன்கள் விரைவில் கிடைக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இன்னும் சில காலங்களில் அரச அதிகாரிகள் இந்த அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்திக்கொள்வார்கள் என்றும் எதிர்வுகூறினார்.
அத்துடன், உயர் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகச் சில சட்டத்தரணிகள் அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்படுவதாகவும், அவர்களும் ஒருநாள் ஓய்வுபெற வேண்டிய காலம் வரும் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.


















