கேப்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆற்றவிருந்த உரைகள் இரத்துச் செய்யப்பட்டமையை கருத்து சுதந்திம் மீதான முடக்கமாக கருத முடியாது என சர்வதேச மன்னிப்புசபை ஆய்வாளர் த்யாகி ருபவன்பத்திரண கூறினார்.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய புகழ்பெற்ற இரு பல்கலைக்கழகங்களின் மாணவ சங்கங்களில் உரையாற்றுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பு தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் மத்தியிலிருந்து வலுத்த எதிர்ப்பை அடுத்து, பல்கலைக்கழக சங்க ஒருங்கிணைப்புக் குழுக்களால் அவ்விரு உரைகளும் இரத்துச் செய்யப்பட்டன.
இந்நிலையில் தனது உரைகள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த, நாமல் ராஜபக்ஷ உரைகள் இரத்துச்செய்யப்பட்டமையானது ஒருபோதும் கருத்து சுதந்திரத்தையோ அல்லது ஜனநாயகத்தையோ வலுப்படுத்தும் வகையில் அமையாது எனக் குறிப்பிட்டார்.
அதனை மேற்கோள் காட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள சர்வதேச மன்னிப்பு சபையின், தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன்பத்திரன, ராஜபக்ஷக்களினால் கொல்லப்பட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்ட மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் என எவருமே இல்லாமல் இருந்திருந்தால், தற்போது நாமல் ராஜபக்ஷ முன்வைக்கின்ற கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் எனும் வாதம் செல்லுபடியாகியிருக்கும் எனக் குறிப்பிட்டார்.















