-சு.பாஸ்கரன்-
பூநகரி பிரதேச செயலர் பிரிவில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை விடுவிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று நடைபெற்றிருந்த பூநகரி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தின்போதே, மக்கள் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தனர். இதன்போது மேலும் அங்கு குறிப்பிடுகையில்,
பூநகரி பிரதேசத்தில் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு நிலத்தை வனவள திணைக்களம் 2012ம் ஆண்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது.
இந்த நிலத்தை உடனடியாக விடுவிக்கவேண்டும். மேலும், படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலத்தையும் வனவள திணைக்களம் உரிமைகோருவதுடன், அந்த நிலத்தின் ஒருபகுதியை இரகசியமாக தனியாருக்கு வழங்கவும் வனவள திணைக்களம் நடவடிக்கை எடுப்பதாக முழங்காவில் பிரதேச பொது அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் மேற்படி விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு முன்னர் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


















