பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் திராணியற்ற தமிழ் மாணவர் அமைப்புகளே இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவியின் கூற்றுப்படி, நாமல் ராஜபக்ஷவுடன் விவாதிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், தமது பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர் முன்னால் நேரடியாகக் கேள்வி கேட்க தமக்கு முடியாது என தமிழ் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச இவர்களுக்கு முடியாது என்பது உறுதியாகியுள்ளதோடு, சுதந்திரமான பேச்சு மற்றும் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது கலாசாரத்தைக் காட்டிக் கொடுத்தமை வருத்தத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.


















