இலங்கை பாடசாலை கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள கொழும்பு இந்து கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து கல்லூரி அணிகளுக்கு இடையிலான 15 ஆவது ஜனசக்தி லைஃப் ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ மாபெரும் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பி.சரா ஓவல் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இம்முறை போட்டியை நடத்தும் கொழும்பு இந்துக் கல்லூரி தனது 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இப்போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சி தலைமை அனுசரணை வழங்குகிறது.

இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன், கல்லூரியின் 75 ஆவது ஆண்டு நிறைவில் இந்த பெருஞ்சமர் நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், இரு கல்லூரிகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் மாணவர்களிடையே சிறந்த ஒழுக்கத்தையும் விளையாட்டுத் திறனையும் வளர்க்கவும் இது ஒரு சிறந்த தளமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் அதிபர் ரத்னம் செந்தில்மாறன் தனது செய்தியில், வடக்கு மற்றும் மேல் மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் போட்டி, பிராந்தியங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாளமாகும் எனக் குறிப்பிட்டார்.
இம்முறை போட்டியில் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி களமிறங்கும் அதேவேளை, எஸ்.சுபர்ணன் தலைமையில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணியும் களமிறங்கவுள்ளது.
பழமை வாய்ந்த இந்த இரு பாடசாலைகளின் பெரும்சமரை கண்டுகளிக்க பழைய மாணவர்கள் மற்றும் கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


















