-பிரதமர் ஹரிணி அமரசூரிய புகழாரம்-
இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி பயணிக்கையில், பொருளாதார – கலாச்சார உறவு களை மேம்படுத்தும் வகையிலான சுற்றுலா பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை வரவேற்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் மற்றும் இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் ஆகியவற்றை முன்னிட்டு, இலங்கை – இந்தியச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விசேட கொண்டாட்டத்துடன் கூடிய இராப்போசன விருந்து, நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த ஆண்டில் இந்திய – இலங்கை இருதரப்பு உறவுகளின் வலிமையை நாம் மீண்டும் ஒரு முறை கண்டோம்.
குறிப்பாக, தேவ்னிமோரி புனிதச் சின்னங்களை இலங்கைக்கு எடுத்து வந்து அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதேபோன்று, ‘டித்வா’ சூறாவளி இலங்கையைப் பாதித்தபோது,
‘சாகர் பந்து’ நடவடிக்கை மூலம் எமக்கு உதவிக்கரம் நீட்டிய முதலாவது நாடாக முன்வந்த இந்தியா, எமது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதாகும்.
இலங்கையின் மீட்சிப் பணிகளுக்காக 454 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான நீண்டகால நிவாரணப் பொதியை அறிவித்தமைக்காகவும், நிலைபேறான அபிவிருத்திப் பயணத்தில் எங்களுடன் கைகோர்த்துச் செயற்படுவதற்காகவும் இந்தியாவைப் பாராட்டுகின்றோம்.
இலங்கை – இந்தியப் பங்காளித்துவமானது பொருளாதார அபிவிருத்தி, வலுசக்தி, இணைப்புத்துறை, வர்த்தகம் மற்றும் முதலீடு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு, மக்களிடையிலான தொடர்பு எனப் பல பரிமாணங்களில் விரிவடைந்துள்ளது.
இலங்கை நிலைபேறான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இத்தருணத்தில், இந்திய வர்த்தக நிறுவனங்களின் மேலதிக முதலீடுகளையும், இந்தியாவிலிருந்து அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் நாம் அன்புடன் வரவேற்கின்றோம் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்தியா எமது நெருங்கிய அண்டை நாடு மாத்திரமன்றி, ஒரு முக்கியமான பங்காளியும் ஆகும். இலங்கை மக்களின் நலன் கருதியும் பிராந்தியத்தின் மேன்மைக்காகவும் இந்த ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்தார்.


















