-அரசாங்கத்தை வலியுறுத்தும் ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலகம்-
புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பல்வேறு கரிசனைக்குரிய விடயங்களை உள்ளடக்கியிருப்பதனால், அவ்வரைவை முழுமையாக மாற்றியமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் எனவும், இல்லாவிடின் அதன் பிரயோகத்தை இடைநிறுத்தவேண்டும் எனவும் கோரியுள்ளது.
இப்புதிய வரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தியும், பரிந்துரைகளை உள்ளடக்கியும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:-
சர்வதேச மனித உரிமைகள் சட்டங்கள் மற்றும் உள்நாட்டு அரசியலமைப்பு என்பவற்றின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடுகளுக்கு முரணான பல விடயங்கள் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட உள்ளடங்கியிருப்பதுடன், அவை தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நிகழும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்வதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றன.
இப்புதிய வரைவானது ஏற்கனவே பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் இருப்பதாக அடையாளங்காணப்பட்ட பல குறைபாடுகள் மற்றும் அவற்றின் மேலும் விரிவுபடுத்தப்பட்ட கூறுகளை உள்ளடக்கியிருக்கிறது.
அதன் விளைவாக, ‘பயங்கரவாதம்’ எனும் பதத்துக்கான பரந்துபட்ட வரைவிலக்கணத்தின் காரணமாக தீவிர குற்றமாக்கப்படல், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதுடன் சிவில் இடைவெளி சுருங்குதல், வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் மட்டுமீறிய அதிகாரங்கள், முறையான நீதிமன்ற மேற்பார்வையின்றி ஒருவரை வலுகட்டாயமாகக் கைதுசெய்வதற்கும், நீண்டகாலம் தடுத்துவைப்பதற்குமான அதிகாரம் அளிக்கப்படல், கைதுசெய்யப்படும் சந்தேகநபர் சித்திரவதைகள், வலிந்து காணாமலாக்கப்படல் மற்றும் ஏனைய முறையற்ற கையாளுகைக்கு உட்படுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடு, உரியவாறான வழக்கு விசாரணை செயன்முறை மட்டுப்படுத்தப்பட்டிருத்தல் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு புதிய கரிசனைகள் எழுந்துள்ளன.
எனவே இலங்கையின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டக்கட்டமைப்பானது சர்வதேச சட்டக்கோட்பாடுகள் மற்றும் நியமங்களுக்கு ஏற்புடையவாறு அமைவதை உறுதிப்படுத்துவதற்கு தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவை மீளத்திருத்தியமைப்பது அவசியமாகும்.
ஆகவே புதிதாக முன்மொழியப்பட்ட வரைவை மாற்றியமைக்குமாறும், அவ்வரைவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் நிலவும் குறைபாடுகள் உள்வாங்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சிவில் சமூகம் மற்றும் ஏனைய சகல தரப்பினருடனும் செயற்திறன்மிக்க பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
மேலும் அரசாங்கம் தொடர்ந்து பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பிரயோகித்துவரும் நிலையில், அதனை முழுமையாக நீக்குமாறு அல்லது அதன் பிரயோகத்தை இடைநிறுத்துமாறு கோருகிறோம் என்றுள்ளது.


















