-ரவிகரன் எம்.பி. கோரிக்கை-
-வி.சரவணன்-
முல்லைத்தீவு,செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரியுள்ளார்.
குறித்த குளம்; உடைப்பெடுத்துள்ளதால் அப்பகுதியிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பாதிப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரை கடந்த 27 ஆம் திகதி குளத்துக்கு நேரில் அழைத்துச் சென்று காண்பித்த நிலையிலேயே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்துள்ளார்.
செம்மலைப்பகுதியில் அண்மையில் மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை ரவிகரன் எம்.பி. நடத்தியிருந்த நிலையில், சுமார் 75ஏக்கர் வயல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய குறித்த பெரியகுளக்கட்டு அணைக்கட்டு மூன்று இடங்களில் உடைப்பெடுத்துள்ளமையால் கடல்நீர் குளத்தினுள் உட்புகுவதால் வயல் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயநிலை காணப்படுவதுடன் கிராமத்தின் குடிநீரிலும் பாரிய தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதென மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த குளத்தின் அணைக்கட்டை செம்மலை மற்றும் செம்மலை கிழக்கு கிராம மக்கள் மயானத்திற்கு செல்வதற்கான பாதையாகவும் பயன்படுத்தப்படுகின்றமையால் தற்போது அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்வதில் பலத்த இடர்பாடுகளுக்கு அக்கிராமமக்கள் முகங்கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த குளத்தின் அணைக்கட்டினைச் சீரமைத்துத் தருமாறு உரியவர்களுக்கு கமக்கார அமைப்புக்களினூடாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், இதுவரை குறித்த குளக்கட்டினை சீரமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லையெனவும் மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரை நேரில் சந்தித்து குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்ததடன் அணைக்கட்;டு பகுதிக்க வருகைதந்து நிலமைகளைப் பார்வையிடவேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கமைய கடந்த 27 ஆம் திகதி குறித்த அணைக்கட்டு பகுதிக்கு கமநல உதவி ஆணையாளரை நேரடியாக அழைத்துச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எம்.பி.பாதிப்பு நிலைமைகளை காண்பித்து குறித்த குளத்தின் சீரமைப்புபணியை துரிதப்படுத்துமாறு கோரியுள்ளார்.


















