-பாரம்பரிய முறைப்படி செய்யலாம்-
கரைவலை மீன்பிடி முறையை அரசாங்கம் நிறுத்தவில்லை. மாறாக கரைவரை தொழிலை பாரம்பரிய முறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறே கூறியதாக கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவரை இழுக்க அனுமதி இல்லை எனவும் கூறினார்.
நாடாளுமன்றில் வாய்மொழிமூல வினா ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த அரசாங்கமானது விஞ்ச் இயந்திரங்களையும் உழவு இயந்திரங்களையும் பயன்படுத்தி இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அனுமதித்தது.
உழவு இயந்திரங்களையும் விஞ்ச் இயந்திரங்களையும் பயன்படுத்திஅந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதால், எமது சுற்றாடலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாக சுற்றாடல் அதிகாரசபை, நாரா நிறுவனம் போன்றவை அறிவித்துள்ள சுற்றாடல் அறிக்கையும் அதனையே குறிப்பிடுகின்றன.
ஆகவே, இதனை ஆறு மாதங்களுக்குள் நிறுத்துவோம் என்றும் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு அவ்வாறான மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துமாறும் நாம் மீனவர்களை கேட்டுக் கொண்டிருந்தோம். எனினும் அவர்கள் அதனை நிறுத்தவில்லை. மாறாக போராட்டங்களை நடத்தினார்கள்.
இதனையடுத்து ஜனாதிபதியின் தலைமையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன்போது வின்ச் இயந்திரங்களை மட்டும் இரண்டு மாதங்களுக்கு பாவிக்குமாறும் உழவு இயந்திரங்களை உபயோகிக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான இணக்கமும் காணப்பட்டது.
தற்போது நாம் சூழலியலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். அந்த அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை பின்னர் நாம் முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
















